Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

நடுவின்றி நன்பொருள் வெஃகின்

குறள் 171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]

பொருள்
வெஃகாமை - அவாவின்மை, வெறுப்பு, பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை;

நடுவு - இடை; நடுவுநிலைமை; மாதரிடுப்பு; நீதி; equity, justice, impartiality.

இன்றி - iṉṟi   adv. இன்-மை. Without;இல்லாமல். தனக்கொரு பயனின்றியிருக்க (கலித். 96,30, உரை).

நன் - நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

வெஃகின் - வெஃகு-தல் -  veḵku-   5 v. tr. 1. To desire ardently; மிகவிரும்புதல். அருள் வெஃகி (குறள்,176). 2. To covet; பிறர்பொருளை இச்சித்தல்.இலமென்று வெஃகுதல் செய்யார் (குறள், 174).

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பொன்றி - அழியும்

குற்றமும் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு.

ஆங்கே - அங்கே

தரும் - ஈன்றும்

முழுப்பொருள்
நடுவு என்றால் நீதி. நீதி என்றால் அறம். நடுவின்றி என்றால் நேர்மையில்லாத, அறமில்லாத, உழைப்பில்லாத, நேர்மையான உழைப்பில்லாத என்று பொருள். 

நாம் ஒரு பொருளின் மீது விருப்பம் கொள்கிறோம் என்றால் அதன் மீது ஒரு நியாயம் வேண்டும். அப்பொருளை விரும்புவதற்கான நேர்மையான எண்ணங்களும் உழைப்பும் வேண்டும். இல்லையென்றால் அது அறமாகது. 

இங்கே திருவள்ளுவர் ஒரு பொருளை உடைமையாக்கிக்கொள்வது தவறு என்று மட்டும் சொல்லவில்லை. அறமில்லாமல் ஒரு பொருளை விரும்புவதுக் கூட தவறு என்கிறார் திருவள்ளுவர். 

அப்படி ஒருவர் நேர்மையான உழைப்பில்லாமல் நல்ல எண்ணங்கள் இல்லாமல் ஒரு பொருளை விரும்பினால் அஃது அவருடைய புகழையும் அவரது குடும்பத்தின் புகழையும் அழிக்கும். அது மட்டும் அல்லாது குற்றங்களையும் (குற்றங்கள் செய்யத் தூண்டும்) தரும் என்கிறார் திருவள்ளுவர்.


Image result for ravana sita

(Ravana Abducting Sita)

உதாரணம்:
இச்சைக்கு ராவணனே நல்ல உதாரணமாகும். சீதா மீது கொண்ட இச்சையினால் தான் அவன் எல்லா தவறுகளை செய்தால். பிறர் (ராமரின்) மனைவி சீதா என்று தெரிந்தும், பிறர் மனைவி மீது இச்சைக்கொள்வது தவறு என்று தெரிந்தும் இச்சைக்கொண்டான். அதுவே அவனை பல குற்றங்களை செய்ய வைத்தது. அதுவே அவனது அனைத்து புகழையும் (சிவ பக்தன், வீணை வித்வான், நல்ல ஆட்சியாளன் என்ற பல புகழ்கள்) அழித்தது. ஆதலால் தான் கம்பர் இராமாயணத்தில் சொல்லி இருப்பார்  "கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி"மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி எத்தனை உயர்ந்தது என்று கீழே காணவும்.

மேற்சொன்ன கம்பராமாயண வரிகளின் ஜெயமோகனின் விரிவுரை கீழே

இங்கே அரக்கனைக் கொல்லும் அவதாரம் அல்ல, அறமிலியை அழிக்கும் பேரறத்தான் அல்ல ஒரு கணவனும் இருக்கிறான். தன் மனைவி மேல் காமம் கொண்ட அன்னியனின் உள்ளத்தின் ஆழத்து அடுக்குகளுக்குள் சென்று தேடித் தேடித் துழாவிச் சலிக்கும் ஒரு கணவனின் உள்ளத்தை காணமுடிகிறது இவ்வரியில்.

ஒவ்வொரு சொல்லாலும் அந்த நுட்பத்தை நிகழ்த்துகிறான் தமிழ்த் தெய்வம் சன்னதம் கொண்டெழுந்த நாவினன். சீதை கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஆகச் சொல்லப்படுகிறாள். கற்பின் கனலாக அல்ல, மோகவல்லியாக. பித்தூட்டும் பெண்ணாக.

அசோகவனத்தில் கோடை நதியென மெலிந்து தெளிந்து ஒளி கொண்டு தவக்கோலம் பூண்டிருக்கும் நாயகி அல்ல அவன் நினைக்கும் அப்பெண். கள் மலர் சூடி கண்மலர்ந்து சிரித்து ராமனை களி கொள்ள வைத்த இளங்கன்னி. அவன் அங்கு தேடுவது அவளை.

ராவணன் அந்தக் கன்னியை தன் ஊன்விழிகளால் கண்டிருக்கவே மாட்டான், அவனுள் கரந்த காதலன் காணாமலிருப்பானா என்ன?

ராவணன் சீதையை கவர்ந்து வந்தது தெரிந்த காதலே. அப்படியென்றால் கரந்த காதல் எது? எங்கோ ஆழத்தில் அப்பாலும் ஒரு காதல் இருந்ததா? முற்றிலும் வேறானது? கள்ளிருக்கும் மலரா அவன் உள்ளம்?

ராவணனின் நகர்ச்சிறையிலிருந்து அவளை மீட்கலாம் ராமன், மனச்சிறையிலிருந்து எப்படி மீட்பான்? உள்ளிருக்கும் எனக் கருதி தடவுகிறது அம்பு. பதைப்புடன் ஏமாற்றத்துடன் சீற்றத்துடன்

இன்னும் சிலநாட்களில் அவளை அனல்தேர்வுக்கு அனுப்பப் போகிறவன் அவன். அதற்கு ஒர் சலவைக்காரரின் சொற்கள் மேலதிகமாகத் தேவைப்படுகின்றன , அவ்வளவே. அதற்கான அந்தத் தவிப்பு அவனுள் இப்போதே இருக்கிறது.

இந்த உச்சத்தில் மானுட ராமனின் அம்பு பட்டுச் சரியும் அமரக்காதலனாகிய ராவணனே வாசகனின் கண்முன் பேருருவம் கொள்கிறான். அவனை நோக்கியே காவியகர்த்தனும் கண்ணீர் உகுக்கிறான் எனத் தோன்றுகிறது.

வீழ்ந்தான் அரக்கன் என அலையெழுந்து பூசல் கொண்டாடவில்லை கம்பனின் சொற்கடல். அங்குநிகழும் மானுட நாடகத்தின் உள்ளே புகுந்து தடவிச் செல்கிறது காவியச்சொல் எனும் வாளி. அங்கு கவிஞன் பிரம்மத்தின் சொல்வடிவத் தோற்றமென நின்றிருக்கிறான்.


பின்னும் மனம் விரியும் வாசகன் மட்டுமே பெருங்காதல் கொண்ட கணவனே ஆயினும் , பேரறத்தான் ஆயினும், புவியணைந்த பரம்பொருளே ஆயினும் அவன் மானுடன் என உணர்ந்து , அவன் ஆழம் தன் ஆழமே என உணர்ந்து அவனை மேலும் அறிவான். நீ நான் என இங்கு வந்தவன் அல்லவா என நெகிழ்வான்.

மேலும்:
இன்னா நாற்பது பாடலொன்று, “அடைக்கலம் வவ்வுதல் இன்னா” என்று பிறரிடம் அடைக்கலமாகிய பொருளைக் கவருதல் துன்பம் தரும் என்கிறது. மாவலி வானகத்தையும் வையகத்தையும் பறித்து என்ற பொருளிலே கம்பர் “திறல் மாவலி என்பான் வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்” என்பார். மாவலி என்பான் திறமுடையவந்தான் ஆனால் தேவருக்கு உரிய வானகத்தையும், மனிதருக்குரிய வையகத்தையும் அவன் முறையற்று கவர்ந்ததை “வவ்வுதல்” என்ற சொல்லிலே கம்பர் உணர்த்துகிறார்.
அபிராமி பட்டரோ உமை சிவனாரின் இடப்பாகம் பற்றியதை உணர்த்துவிதமாக இருபாடல்களில் வவ்வுதலைக் குறிக்கிறார். இக்குறள் கருத்துக்கு மாறாக இருந்தாலும், பற்றினை நல்விதமாகக் கூறுதலுக்கும் வவ்வுதல் பயனாகியுள்ளது. “வவ்வியபாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே” என்பார் பட்டர்.  அந்தாதியானதால், முந்தைய பாடலில், “மதிசய மாகவன்றோ வாமபாகத்தை வவ்வியதே?” என்ற வினாவோடு முடித்திருப்பார்.
மற்றொரு முத்தொள்ளாயிரப்பாடல், தலைவனிடம் மயங்கி அவனிடம் மனதை பறிகொடுத்த பெண்கள் அதனால், அழகு குன்றினராம். அவ்வாறு பெண்களின்  அழகைத் திருடிகொண்டு போனமன்னன் எப்படி செங்கோல் செலுத்தும் மன்னனாக இருக்கமுடியும் என்கிறது. கவிதை நயத்தில் தலைவனை ஏற்றிச் சொன்னாலும் வவ்வுதல் என்ற சொல் “திருடலுக்கு ஒப்பானதாகவும், அது செங்கோல் ஏந்தும் தகுதியை மன்னனுக்கு அளிக்காது” என்றும் சொல்வது கவனிக்கத்தக்கது. அப்பாடல்:

வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேன்மாந்தைக் கோவே! – நிரை வளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார்
செங்கோலன் அல்லன் என!

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, பிறர்க்குரிய பொருளை வௌவக் கருதாமை. பிறர் உடைமை கண்ட வழிப் பொறாமையே அன்றி, அதனைத் தான் வௌவக் கருதுதலும் குற்றம் என்றற்கு, இஃது அழுக்காறாமையின் பின் வைக்கப்பட்டது.)

நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்; குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் - அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும். (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.'நன்பொருள் வெஃகின்'என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.).

மணக்குடவர் உரை
நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம், இது சந்தான நாச முண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.

No comments:

Post a Comment